Friday 18 January 2013

NET கல்லூரி விரிவுரையாளராக புதிய விதிமுறைகள்!



                                கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு கொண்டு வந்துள்ளது. இதன்படி, நெட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் ரேங்க் பட்டியலில் முதல் 15 சதவீத இடங்களில் இடம் பெறுபவர்கள் மட்டுமே விரிவுரையாளர் பணிக்குத் தகுதி பெற முடியும்  என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் விரிவுரையாளர் பணியில் சேர வேண்டும் என்றால் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அல்லது கோவை பாரதியார்  பல்கலைக்கழகம் நடத்தும் மாநில தகுதித் தேர்வில் (செட்) தேர்ச்சி பெற வேண்டும். ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (ஜேஆர்எஃப்) பெறவும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் தேர்வுகளில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கும் முறை கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே முறையில், அண்மையில் நடைபெற்ற இத்தேர்வை  7.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இத்தேர்வை நடத்தும் பல்கலைக்கழக மானியக் குழு தற்போது நெட் தேர்வில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.நெட் தேர்வில் மூன்று தாள்கள் உள்ளன. முதல் தாளிலும் இரண்டாம் தாளிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். மூன்றாவது தாளில் விரிவான அளவில் விடைகளை எழுத வேண்டும். முதல் இரண்டு தாள்களில் குறைந்த பட்ச மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களின் மூன்றாவது தாள் திருத்தப்படும் முறைஇருந்தது. ஆனால், தற்போது இந்த முறை இல்லை. அனைத்துத் தாள்களும்அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும் வகையில் கடந்த ஜூன் மாதத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. முதல் தாளில் கொடுக்கப்படும் 60 கேள்விகளில் 50 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். இதற்கு 100 மதிப்பெண்கள். இரண்டாவது தாளில் கொடுக்கப்படும் 50 கேள்விகளில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும். இதற்கு 100 மதிப்பெண்கள். இந்த இரண்டு தேர்வுகளுக்கும் இரண்டரை மணி நேரம் வழங்கப்படும். மூன்றாவது தாளில் 75 கேள்விகள். இதற்கு 150மதிப்பெண்கள். இந்தத் தேர்வுக்கு இரண்டரை மணி நேரம் வழங்கப்படும். இந்த முறைதான் தற்போது நடைமுறையில் உள்ளது.இந்தத் தேர்வில் பொதுப் பிரிவு மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தாள்களில் தலா 40 சதவீத மதிப்பெண்களும் மூன்றாவது தாளில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும். அதாவது, முதல் மற்றும் இரண்டாம் தாள்களில் தலா 40 மதிப்பெண்களும் மூன்றாவதுதாளில் 75 மதிப்பெண்களும் பெற வேண்டும். கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தாள்களில் தலா 35 சதவீத மதிப்பெண்களும் மூன்றாவது தாளில் 45 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முதல் மற்றும் இரண்டாம் தாள்களில் தலா 35 சதவீத மதிப்பெண்களும் மூன்றாவது தாளில் 45 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும். இதுவரை, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்று விட்டாலேயே அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு தற்போது புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளதுஅதன்படி, நெட் தேர்வில் மூன்று தாள்களிலும்பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ளவர்களின் ரேங்க் பட்டியல் பாடவாரியாகவும் பிரிவு வாரியாகவும் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலில் முதல் 15 சதவீத இடங்களுக்குள் வருபவர்கள் மட்டுமேநெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெறுவதற்கு தனி ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2006ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 6,920. 2010ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 12,927. 2011 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 13,859. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற இந்தத் தேர்வில் 43,957 பேர் தேர்ச்சிபெற்றனர். தேர்வு முறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் இந்தத் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்தே தற்போது இந்தப் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த தேர்வின்போது நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை உயர்த்தும் முடிவை வாபஸ் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால், எத்தனை பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும்கூட, ரேங்க் பட்டியலில் முதல் 15 சதவீத மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே விரிவுரையாளர் பணிக்குத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவர். எனவே, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே போதாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் பலர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கெனவே நடந்து முடிந்த நெட் தேர்வுகளில் 4 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெறும் தமிழகத்தில் இந்தப் புதிய விதிமுறைகளால் தேர்ச்சி விகிதம் மேலும் குறையக்கூடும் என்றும் சில மாணவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெற்று பிஎச்டி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்களும் இந்தப்புதிய முறை சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment