Sunday 6 January 2013

ஆர்வமும் முயற்சியும் இருந்தால் தேர்வில் வெற்றி உறுதி



            ஆர்வமும், முயற்சியும் இருந்தால் தேர்வில் வெற்றி உறுதி" என திருமங்கலம் வி.எஸ்.ஆர்., ராமதிலகம் திருமண மண்டபத்தில் "தினமலர்" நாளிதழ் சார்பில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தெரிவித்தனர். சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து வழங்கிய
இந்நிகழ்ச்சியில், காலை பத்தாம் வகுப்பு, மதியம் பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வில் முழு மதிப்பெண் பெறும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் விளக்கினர்.
                            
பத்தாம் வகுப்பு: சி.பி.ஆனந்தன், அரசு உயர்நிலைப் பள்ளி, தொட்டியபட்டி(ஆங்கிலம்): ஆங்கிலத் தேர்வில் மாணவர்களின் கையெழுத்து மிக தெளிவாக இருக்க வேண்டும். கூட்டாக எழுதுவதை தவிர்க்க வேண்டும். படித்தவற்றை எழுதி பார்ப்பது நல்லது. ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். "ரோடுமேப் ', விளம்பரம் போன்ற வினாக்களுக்கு புத்தகத்தில் உள்ளவற்றை படித்தால் போதும்.
                      
எஸ்.கிறிஸ்டோபர் ஜெயசீலன், அரசு உயர்நிலை பள்ளி, திருப்பாலை (கணிதம்): கணித தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற நுணுக்கங்களை மாணவர்கள் தெரிவது அவசியம். அடிப்படை வாய்பாடு, சூத்திரங்கள் தெரிந்து வைப்பது முக்கியம். எண்ணியல், இயற்கணிதம், கனங்கள், அளவியல், வடிவியல் பகுதிகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பாடங்களுக்கு பின் தரப்பட்டுள்ள வினாக்களை படித்திருந்தால், முழு மதிப்பெண் பெறலாம்.
                                   
எஸ்.பாலாஜி, தாசில்தார்(கல்வி) சென்னை மாநகராட்சி (அறிவியல்): வேதியியல், இயற்பியல், உயிரியலில் இருந்து சமமான கேள்விகள் இடம்பெறும். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பாடங்களுக்கு பின் உள்ள வினாக்களை முழுமையாக படித்தால் போதும். உரிய விடையை தேர்வு செய்க, பொருத்துக, படம் வரைந்து பாகங்களை குறிப்பிடுக போன்றவற்றில் முழு மதிப்பெண்கள் பெறவேண்டும். வேதியியலில் கரைதிறன் கணக்கீடு, விதிகள், மூலக்கூறு வாய்பாடு தெரிந்திருக்க வேண்டும்.

              பிளஸ் 2:*எம்.சுப்பிரமணியன், பி.கே.என்., பள்ளி, திருமங்கலம் (ஆங்கிலம்): ஆங்கில தேர்வில் எளிதில் வெற்றிபெற ஒவ்வொரு பாடத்திற்கும் பின் இடம் பெற்ற பயிற்சியை நன்றாக படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். தற்போதைய வினாத்தாள் அமைப்பில், கட்டுரை வினாக்கள் எழுதாமல் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. விரிவான விடை எழுத, முதல் 3 பாடங்களை நன்கு படித்து வைத்திருக்க வேண்டும்.
                                
எஸ்.பாலாஜி, தாசில்தார் (கல்வி) சென்னை மாநகராட்சி (கணிதம்): கணிதத்தில் எளிதாக தேர்ச்சி பெற, வெக்டர் இயற்கணிதம், வகை நுண்கணிதம் பயன்பாடு, தனித்த நிலை கணக்கியல் பாடங்களை நன்கு படித்து வைத்திருந்தால் போதும். நூறு சதவீதம் தேர்ச்சி பெற, ஒரு மதிப்பெண் வினாக்களில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக புத்தகம் மற்றும் 2006 முதல் 2012 வரையிலான பொது தேர்வில் இடம்பெற்ற வினாக்கள் அனைத்தையும் நன்கு படித்தால் முழு மதிப்பெண் பெறலாம்.
                                   
டி.எஸ். ஸ்ரீதர்பாபு, சவுராஷ்டிரா பள்ளி, மதுரை (இயற்பியல்): பாடப்பகுதிக்கு பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் முழுவதையும் படிப்பது நல்லது. பொதுத் தேர்வுகளில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். அனைத்து பயிற்சி பகுதியில் உள்ள வினாக்களை படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம். நெடு வினாக்களை சிறிய பத்திகளாகவும், சமன்பாடுகளை அடிக்கோடிட்டும் காட்டினால் முழு மதிப்பெண் பெறலாம்.
                                      
.சீனிவாசன், அரசு மேல்நிலைப் பள்ளி, வாடிப்பட்டி (வேதியியல்): கனிம வேதியியலில் அணைவு சேர்மங்களை படித்து வைத்திருப்பதும், சமன்பாடுகளை சமன் செய்வதும் அதிக மதிப்பெண் பெற உதவும். கரிம வேதியியலில் வெப்பம், வினைவேக மாற்றிகளை சரியாக எழுத வேண்டும். இயற்வேதியியலில் கணக்குகள், வரைமுறை கேள்விகளாக எழுத வேண்டும்.
                                 
பி.சரவண முருகன், அரசு பெண்கள் பள்ளி, வாடிப்பட்டி (உயிரியல்): படம் வரைதல், பாகங்களை குறிப்பிடுதல், உயிரி தாவரவியல் உள்ளமைப்பியல், செல்லியல் பகுதிகளை நன்கு படித்திருக்க வேண்டும். உடற்செயலியல் பகுதியில், சிறுகுடல் செரித்தல், இதயம் செயல்பாடு போன்ற பத்து மதிப்பெண் கேள்விகளை படிப்பது அவசியம். குறிப்பெடுத்து படித்தால் நெடு வினாக்கள் எழுத உதவும். வினாத்தாள் அடிப்படையில் தேர்வுக்கு தயாரானால் முழு மதிப்பெண் உறுதி
.

No comments:

Post a Comment