Wednesday 23 January 2013

பேரிடர் குறித்து எச்சரிக்க மொபைல் போனில் வரைபடம்



                              "பேரிடர்கள் குறித்த தகவல்களை, மக்களுக்கு முன்கூட்டி தெரிவிக்க, மொபைல் போனில் வரைபடம் அனுப்பும் வசதியை பயன்படுத்த வேண்டும்,'' என, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சியின், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். சென்னை
பல்கலைக்கழகம் மற்றும் ..டி., சென்னை சார்பில், பேரிடர் மேலாண்மையில் முன்னேற்றம் காண்பது குறித்த, நான்கு நாள் கருத்தரங்கம், ..டி., வளாகத்தில் துவங்கியது. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், கனமழை, வெள்ளம், வறட்சி காட்டு தீ போன்ற பேரிடர்களால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இக்கருத்தரங்கில், விஞ்ஞானிகள் விரிவாக விவாதிக்கின்றனர்.
                                கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், நெம்மேலியில் உள்ள சென்னை பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வருமான, கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஆஸ்திரேலியாவில், காட்டு தீ போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது, அதுகுறித்து, முன்கூட்டியே அப்பகுதி மக்களின் மொபைல் போன்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், எந்த பகுதியில், காட்டு தீ பரவி வருகிறது. அங்கிருந்து தப்பிக்க மக்கள், எப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது குறித்த, வரைப்படம் மொபைல்போனில் அனுப்பப்படுகிறது. இதன் மூலம், பேரிடர்களில் இருந்து, மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முடிகிறது. அது போல, இந்தியாவிலும், சுனாமி, கனமழை, வெள்ளம் உள்ளிட்ட, பேரிடர்கள் எந்த பகுதியில் ஏற்படுகிறது, எங்கு அவசர உதவிகள் கிடைக்கிறது உள்ளிட்டவை குறித்த வரைபடம், மொபைல் போனில் அனுப்பும் வசதியை பயன்படுத்த வேண்டும்.
                            டில்லி பல்கலையிலும், மும்பை, டாடா சமூக அறிவியல் மையத்தில் மட்டுமே, பேரிடர் மேலாண்மை குறித்த பாடங்கள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்த, விழிப்புணர்வை, மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், பேரிடர் மேலாண்மை குறித்த, புதிய பாடப் பிரிவை துவக்க வேண்டும். சுனாமிக்கு பின், "இன்காஸ்" தொழில்நுட்பம் மூலம், சுனாமி குறித்து முன்கூட்டி அறியும் வசதி, கடலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

No comments:

Post a Comment