Saturday 19 January 2013

கட்-ஆஃப் மதிப்பெண், பிறந்த தேதி விவரங்களுடன் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்: 2,900 பேர் அடங்கிய புதிய பட்டியல் வெளியீடு



                               கட்-ஆஃப் மதிப்பெண், பிறந்த தேதி விவரங்களுடன் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,900 பேர் அடங்கிய திருத்தப்பட்ட புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏற்கெனவே தேர்வுபெற்ற 2,308
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுடன், 2010-11 ஆம் ஆண்டு ஆண்டுக்கான 600 பின்னடைவுப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் விதமாக பாடவாரியாக கட்-ஆஃப் மதிப்பெண், இன சுழற்சி முறை, பிறந்த தேதி ஆகிய விவரங்களும் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவரங்களை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம். முன்னதாக, அந்தந்தத் தேர்வர்கள் மட்டுமே விவரங்களைப் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
                         ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியலைப் பார்க்கலாம். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தாவரவியல் ஆசிரியர்கள் பட்டியல் எப்போது?: கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் கூடிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியலை வெளியிடும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தாவரவியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெறும். அடுத்த 2 வாரங்களுக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
                             தாவரவியல் பாடத்தோடு இந்திய கலாசாரம், ஹோம் சயின்ஸ், பொலிட்டிகல் சயின்ஸ், சிறுபான்மை மொழிகள் பாடங்களுக்கான முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ரேங்க் பட்டியல் வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படும் என்பதால் இவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிகிறது.

 
வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் தமிழ் வழி முன்னுரிமை கோரியுள்ளோருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்திய பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.  2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு மே 27-ஆம் தேதி நடைபெற்றது. நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்த பிறகு டிசம்பர் 10-ஆம் தேதி 2,308 பேர் அடங்கிய தாற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
                        இப்போது பின்னடைவுப் பணியிடங்கள் உள்பட 2,900 பேர் அடங்கிய  இறுதிப் பட்டியல் முழு விவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத் துறைகளின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் இந்தப் பின்னடைவு இடங்கள் ஏற்பட்டிருந்தன. பின்னடைவுப் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட துறைகளே வெளியிடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment