Wednesday 2 January 2013

பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு: கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை



           பிளஸ் 2 பொதுதேர்வில், ஆங்கில தேர்வுகள் இடைவெளியின்றி வருவதால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை ஒருநாள் இடைவெளி விட்டு, மார்ச் 8ல் (வெள்ளி) நடத்த வேண்டும் என கிராமப்புற மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மார்ச் 1
முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. அன்று (வெள்ளி) தமிழ் முதல் தாள், மார்ச் 4 (திங்கள்) இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. ஒரு நாள் இடைவெளிக்கு பின், மார்ச் 6 ல்(புதன்) ஆங்கிலம் முதல் தாள், மார்ச் 7 ல் (வியாழன்) ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
                             தமிழ் தேர்வுகளுக்கு இடையில், இரண்டு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது போல், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு இடையே மாணவர்களுக்கு ஒருநாள் கூட விடுமுறை இல்லை. இது கிராமப்புற தமிழ் வழிகற்றல் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும். மேலும், பிளஸ் 2 தேர்வு மையங்கள் அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் இல்லை. கிராமப்புற மாணவர்கள், அருகில் உள்ள பெரிய ஊர், நகரங்களில் இருக்கும் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதி விட்டு, வீடு திரும்ப மாலை 6.00 மணி ஆகிவிடும். அதன்பிறகு ஏற்படும் பல மணி நேர மின்வெட்டால், படிப்பதற்கு சிரமம் அடைவார்கள். இதனால், ஆங்கிலம் இரண்டாம் தாளில் மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
          எனவே, அந்த தேர்வை ஒருநாள் இடைவெளி விட்டு, மார்ச் 8ல் (வெள்ளி) நடத்த வேண்டும், என கிராமப்புற மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பிளஸ் 2 ஆங்கில ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "மார்ச் 4ல் பொதுதேர்வு ஆரம்பமாகும், என எதிர்பார்த்தோம். அப்படி துவக்கியிருந்தால், மார்ச் 7, 9 தேதிகளில் ஆங்கில தேர்வு நடத்த வாய்ப்பிருந்தது. ஆனால், மார்ச் 1ல் பொதுத்தேர்வு துவங்குவதால், ஆங்கில தேர்வுகள் இடைவெளி இன்றி, அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். தேர்வு துவங்கியது முதல் முடியும் வரை 16 நாட்கள் விடுமுறை வருமாறு செய்துள்ள கல்வித்துறை அதிகாரிகள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாளிற்கு இடையே ஒரு நாள் கூட விடுமுறை தராதது ஏன், என தெரியவில்லை. எனவே, தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment