Sunday 13 January 2013

ஏழைகள் கேண்டீன்… இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5: ஜெ. அறிவிப்பு



              ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களின் வசதிக்காக சென்னை முழுவதும் ஆயிரம் சிற்றுண்டி உணவகங்களை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உண்ணத்
தெரிந்தவனுக்கு வியாதியில்லை என்று ஒரு பழமொழி உள்ளது. அதாவது உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவினை சரியான வேளையில் பசி எடுத்தப் பின் புசிப்பவனுக்கு எந்த விதமான நோயும் ஏற்படாது. எனவே, நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் சத்தான உணவு வகைகளை ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் குடிசைப் பகுதிகளில் வாழும் பெரும்பாலான ஏழை மக்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் ஆவார்கள். இது தவிர, சென்னைக்கு பணி நிமித்தமாக வந்துசிறிது காலம் தங்கி செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்கள் அனைவரும் தங்களது குறைந்த வருவாயில் உணவுக்கென அதிகம் செலவு செய்ய இயலுவதில்லை. எனவே, வயிற்றுக்குச் சோறிடவேண்டும் இங்கு வாழும் மனிதர்கெல்லாம் என்ற பாரதியாரின் கூற்றுப்படி, அனைவருக்கும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து சலுகை விலையில் தரமான உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சிப் பகுதியில் சென்னை மாநகராட்சியின் மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்களைத் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை நகரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் ஒரு சிற்றுண்டி உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி உணவகங்களை தொடங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உணவகங்களில் இட்லி ஒன்று 1 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் மேலும், இத்திட்டத்திற்காக 500 மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற சலுகை விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment